🇺🇸🇮🇷 ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க ஈரான் தீர்மானம்… அமெரிக்காவுடன் மீண்டும் புதிய மோதல்! 🚢🛢️
ஹோர்முஸ் நீரிணை வழியே பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான இந்த கடல் பாதையில் ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரானில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய், கடல்சார் சேவைகளுக்காக இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
📌 ஓமானுடன் இணைந்து புதிய பொறிமுறை
கடல்சார் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடல்வழிக் குற்றங்களைத் தடுப்பது ஆகிய நோக்கங்களுக்காக ஓமான் நாட்டினுடன் இணைந்து ஈரானிய அரசு புதிய பொறிமுறையொன்றை உருவாக்கி வருவதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து எந்தவித கட்டணமுமின்றி இயல்பாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
⚖️ சர்வதேச சட்டமும் ஈரானின் நிலைப்பாடும்
ஹோர்முஸ் நீரிணையின் மிகக் குறுகிய பகுதி வெறும் 39 கிலோமீற்றர் அகலத்தைக் கொண்டதாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் சட்ட மாநாட்டின் (UNCLOS) படி, ஈரானும் ஓமானும் தலா 12 கடல் மைல்களை (22.2 கிலோமீற்றர்) தங்கள் எல்லைக்குட்பட்ட கடற்பகுதியாக உரிமை கோருவதால், இந்த நீரிணையில் சர்வதேச கடற்பகுதி என்று எதுவுமில்லை.
UNCLOS சட்டம் வணிகக் கப்பல்களுக்கான தடையில்லாப் பயண உரிமையை உறுதிசெய்வதுடன், முற்றுகையிடுவதைத் தடைசெய்கிறது. ஆனால் ஈரான் இந்தச் சட்டப் பார்வையை ஏற்பதில்லை.
♟️ “நாங்கள் சதுரங்க ஆட்டத்தில் திறமையானவர்கள்”
அதேவேளை, போர் தொடங்குவதற்கு முன்னர் இருந்த நிலையைப் போன்று ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதே அமெரிக்காவின் இலக்கு என அமெரிக்க உப அதிபர் ஜே.டி. வேன்ஸ் (JD Vance) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு “சதுரங்க ஆட்டம்” (chess game) என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஈரானிய பேச்சாளர் பாகேய், திரை மறைவிலோ அல்லது நேரடியாவோ, சதுரங்க ஆட்டத்தில் ஈரானியர்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.
#BreakingNews #Iran #USNews #StraitOfHormuz #MiddleEastCrisis #WorldNews #OilMarket #TamilKlik

