⚖️ 🚨 பிரித்தானிய அரசியலில் அடுத்தடுத்த சர்ச்சைகள்… ரிபோர்ம் யூகே கட்சித் தலைவர்களைச் சூழும் ஒழுக்கவியல் விசாரணைகள்! ⚖️🇬🇧
பிரித்தானியாவின் ரிபோர்ம் யூகே (Reform UK) கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் டைஸ் (Richard Tice), தனது நலன்சார் பதிவை (register of interests) முறையாக வெளிப்படுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற தரக்கட்டுப்பாட்டு ஆணையாளரின் (Parliamentary Standards Commissioner) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ரிபோர்ம் யூகே துணைத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதை நாடாளுமன்ற ஒழுக்கவியல் ஆணையாளர் டானியல் கிரீன்பேர்க் (Daniel Greenberg) உறுதிப்படுத்தியுள்ளார்.
📌 குற்றச்சாட்டுகள் குறித்த ரிச்சர்ட் டைஸின் விளக்கம்
பிரித்தானிய ஜனநாயகம் மற்றும் இஸ்ரேலிய செல்வாக்கு குறித்த விவாதத்தின் போது, தனது நலன்சார் பதிவைக் குறிப்பிட்டிருக்க வேண்டுமா என்பது தொடர்பான புகார் குறித்தே இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ரிச்சர்ட் டைஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேலிய எதிர்ப்பு அமைப்பொன்றே இந்த புகாரை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அயூப் கான் (Ayoub Khan MP) பாலஸ்தீன ஆதரவுக் குழுவிடமிருந்து பெற்ற கணிசமான நன்கொடையை அறிவிக்கத் தவறியமை குறித்து இந்த அமைப்பு ஆணையாளருக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
முன்னதாக, தண்டனை பெற்ற குற்றவாளியான ஜார்ஜ் கொட்ரெல் (George Cottrell) என்பவரிடமிருந்து பெறப்பட்ட முறையான அறிவிக்கப்படாத £80,000 கடன் தொடர்பான புகாரை விசாரிக்க ஆணையாளர் மறுத்த சில நாட்களிலேயே இந்த புதிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
🏛️ தொழிலாளர் கட்சியின் கடுமையான விமர்சனம்
ரிபோர்ம் யூகே கட்சிக்கு எதிராக எழுந்துள்ள இந்த புதிய குற்றச்சாட்டு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் கட்சி, “விதிகள் தங்களுக்குப் பொருந்தாது என்று ரிபோர்ம் யூகே கட்சி நினைப்பது இதன் மூலம் தெளிவாகிறது” என விமர்சித்துள்ளது.
தொழிலாளர் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில்: “ரிபோர்ம் யூகே கட்சியின் ஊழல் சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவரது நிறுவனம் £600,000 வரியைச் செலுத்தத் தவறயமைக்கு மேலதிகமாக, தற்போது ரிச்சர்ட் டைஸ் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரிபோர்ம் யூகே கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருவர் மீதும் ஒழுக்கவியல் விசாரணைகள் நிலுவையில் உள்ளன,” எனச் சுட்டிக்காட்டினார்.
முறைசாரா நிதித் தொடர்புகள், பொலிஸ் விசாரணைகள் மற்றும் நைஜல் ஃபராஜின் (Nigel Farage) இரகசிய £5 மில்லியன் நன்கொடை விவகாரம் என அக்கட்சி தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
⏳ கட்சி நிதி தொடர்பான சர்ச்சைகளும் இடைத்தேர்தலும்
சமீபத்திய வாரங்களில் ரிபோர்ம் யூகே கட்சி தனது நிதி ஆதாரங்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறது. கிரிப்டோ கோடீஸ்வரரான கிறிஸ்டோபர் ஹார்போர்னிடமிருந்து பெறப்பட்ட £5 மில்லியன் நன்கொடை மற்றும் குற்றவாளி ஜார்ஜ் கொட்ரெலிடமிருந்து பெறப்பட்ட அன்பளிப்புகள் குறித்து கேள்விகள் எழுந்தன.
இதனையடுத்து கிளக்டன் (Clacton) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், அதனைத் தொடர்ந்து வரும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் அறிவித்துள்ளார். 2024 இல் நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் ஹார்போர்னியிடமிருந்து பெற்ற பணத்தை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பாக ஃபராஜும் ஆணையாளர் டேனியல் கிரீன்பேர்க்கின் விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலை “மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான போட்டி” என்று ஃபராஜ் வர்ணித்துள்ளார். இருப்பினும், கன்சர்வேடிவ், லிபரல் டெமாக்ரட்ஸ், கிரீன்ஸ் மற்றும் தொழிற்கட்சி ஆகிய அனைத்து முதன்மை அரசியல் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை “ஒரு விரக்தியான அரசியல் நாடகம்” எனக் கூறி இதில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.
#UKNews #UKPolitics #ReformUK #RichardTice #NigelFarage #UKParliament #LabourParty #SriLankanTamilNews #TamilKlik

