🚨 தெருவிளக்குக் கம்பங்களில் கொடி தொங்கவிட்டால் வரம்பற்ற அபராதம் அல்லது சிறை… பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு! 🇬🇧
பிரித்தானியாவில் தெருவிளக்குக் கம்பங்களில் (Lamp posts) அனுமதியின்றி கொடிகளை ஏற்றுபவர்களுக்குச் சிறை தண்டனை, வரம்பற்ற அபராதம் அல்லது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட்ஷயர் கவுன்சில் (Oxfordshire County Council) தொடர்ந்த வழக்கில் பிரித்தானிய உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
📌 நீதிமன்றத்தின் தடை உத்தரவு
வீதிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டி ஒக்ஸ்போர்ட்ஷயர் கவுன்சில் இந்தச் சட்ட நடவடிக்கையை எடுத்திருந்தது. மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ சட்ட அறிவித்தல் வழங்கப்பட்டும், மே மாதத்தில் முன்-நடவடிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டும், பல மாதங்களாக அனுமதியின்றி கொடிகள் பறக்கவிடப்பட்டு வந்ததை கவுன்சில் உறுதிப்படுத்தியது.
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி டெக்ஸ்டர் டயஸ் (Mr Justice Dexter Dias), ஒக்ஸ்போர்ட்ஷயர் பிராந்தியத்தில் உள்ள நெடுஞ்சாலைக் கட்டமைப்புகளில் கொடிகளை இணைக்கவோ அல்லது வீதிகளில் அவற்றை வரையவோ கூடாது என அடையாளம் தெரியாத நபர்களுக்கு உத்தரவிட்டுத் தடை விதித்தார்.
இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்குச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம், வரம்பற்ற அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
🌍 பின்னணியும் சர்ச்சையும்
‘ஒப்பரேஷன் ரைஸ் தி கலர்ஸ்’ (Operation Raise The Colours) என்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து, யூனியன் கொடி (Union Flag) மற்றும் செயிண்ட் ஜார்ஜ் குரூஸ் கொடிகள் (St George’s Cross) பரவலாகக் காட்சிப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தைத் தொடர்ந்தே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
பல உள்ளூராட்சி சபைகள் இவ்வாறான கொடிகளை அகற்றியுள்ளன. இது அங்கு அரசியல் விவாதங்களைத் தூண்டியுள்ளது. கொடிகள் அகற்றப்படுவதை சிலர் கண்டித்துவரும் அதேவேளையில், இவ்வாறான கொடி ஏற்றங்கள் வேற்று நாட்டவர் மீதான வெறுப்பு அல்லது இனவெறியுடன் தொடர்புடையவை என வேறு சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
💬 நீதிபதி தெரிவித்த கருத்துகள்
வழக்கு விசாரணை குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதி டெக்ஸ்டர் டயஸ், “விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டபோதும், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோதும் ஒக்ஸ்போர்ட்ஷயரில் கொடிகளைப் பொருத்துவதில் ஈடுபட்ட கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. இதனாலேயே அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக இந்த விண்ணப்பத்தை மனுதாரர் தாக்கல் செய்தார்,” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “மனுதாரர் உத்தியோகபூர்வமற்ற முறையில் அமைக்கப்பட்ட கொடிகளைத் திரும்பத் திரும்ப அகற்றியபோதிலும், பின்னர் மீண்டும் கூடுதல் கொடிகள் பொருத்தப்பட்டு வருகின்றன,” என்றார்.
“கவுன்சில் ஊழியர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் என மனுதாரரால் பணிக்கப்பட்டவர்கள், கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது அவர்களுக்குப் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சில சமயங்களில் அவர்கள் அகற்றும் பணியை முற்றாகக் கைவிட்டுள்ளனர்,” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
⚠️ ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்
கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களும், அப்பகுதி வாழ்மக்களும் வசைபாடல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைச் சந்தித்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
பராமரிப்புக் குழுக்கள் “அச்சத்துடனேயே பணியாற்றி வருகின்றன” என்றும், முகமூடிகளை அணியுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும், ஊழியர் ஒருவரின் வீட்டு முகவரி பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் வாகனங்களில் கண்காணிப்புச் சாதனங்கள் (Tracking tags) பொருத்தப்பட்டுள்ளவா எனப் பரிசோதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
“2025 ஓகஸ்ட் மாதம் முதல் நெடுஞ்சாலைகளில் கொடிகளைப் பொருத்துவதும் சின்னங்களை வரைவதும் தொடர்ச்சியாகவும் பிடிவாதமாகவும் நடந்து வருகிறது. இந்தத் தடை உத்தரவு இல்லாமல் அது நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு,” என்றும் நீதிபதி டெக்ஸ்டர் டயஸ் கூறினார்.
⏳ அடுத்து என்ன?
‘ரைஸ் தி கலர்ஸ்’ அமைப்புடன் தொடர்புடைய பென் கல்லன் (Ben Cullen), ட்ரூடி வெல்ஸ் (Trudy Wells) மற்றும் ரியான் பிரிட்ஜ் (Ryan Bridge) ஆகிய மூவர் “எதிர்காலத்தில் கொடி தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம்” என உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்த அமைப்பின் உறுப்பினரான கெவின் குட் (Kevin Good) என்பவருக்கு எதிராகவும் நீதிபதி டெக்ஸ்டர் டயஸ் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
#UKNews #Oxfordshire #UKLaw #HighCourt #RaiseTheColours #UKPolitics #SriLanka #TamilNews #TamilKlik

