🎓 பிரித்தானியாவில் தீவிரமடையும் வேலைவாய்ப்புச் சிக்கல்… பட்டதாரிகளைப் புறக்கணிக்கும் AI தொழில்நுட்பம்… 2,000 முயற்சிகளுக்குப் பின் வேலை பெற்ற இளம்பெண்!
பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்தவுடன் வேலை தேடும் களத்தில் இறங்கிய ரஹ்மா ஹயாத், தான் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலைக்காகக் காத்திருக்க நேரிடும் என்றோ, 2,000க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்றோ ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. லண்டன் சிட்டி செயின்ட் ஜோர்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற ரஹ்மா, ஆரம்பத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவர் அனுப்பிய பல விண்ணப்பங்களுக்கு எவ்வித பதிலுமே வராத நிலையில், அந்த நம்பிக்கை மெல்ல மெல்ல அச்சமாக மாறியது.
வேலை வழங்குநர்களின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான ஆரம்ப பரிசீலனைகளைக் கடந்து செல்வதற்காக, அவர் தனது சுயவிவரத் திரட்டில் (CV) AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயன்றார். எனினும், அது இல்லாத திறன்களைப் பட்டியலில் சேர்த்ததால், அதை அவரே திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
📌 “வாழ்க்கையின் மிகக் கொடூரமான அனுபவம்”
ஹார்ட்ஃபோர்ட்ஷயர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரஹ்மா தனது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “இது என் வாழ்க்கையிலேயே மிகக் கொடூரமான அனுபவமாகும். தினமும் காலையில் எழுந்தது முதல் தூங்கச் செல்லும் வரை மடிக்கணினியிலேயே அமர்ந்திருப்பேன். உணவருந்தும் போது கூட விண்ணப்பங்களை அனுப்பிக்கொண்டிருப்பேன். இது மனதளவில் மிகுந்த சோர்வைத் தந்தது,” என்று அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், “பல நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வேலை அனுபவம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஆனால், தொழிலாளர்களின் வரிசையில் இணையாத ஒருவருக்கு எப்படி அனுபவம் கிடைக்கும்? பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் எவ்வித பயிற்சியும் அளிக்காமல் நேரடியாக வேலையில் அமர்த்தவே அவர்கள் விரும்புகிறார்கள். பல்கலைக்கழகக் கல்வி எம்மை அப்படி உருவாக்குவதில்லை,” என வேதனையுடன் குறிப்பிட்டார்.
🌍 பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு
ஹை பிளையர்ஸ் ரிசர்ச் அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவின் முன்னணி நூறு நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டதாரி வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் கால் பங்கினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இது மேலும் குறையும் என்றும் கணி்க்கப்பட்டுள்ளது. இதனால், பல வருடங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் ஒரே வேலைக்காகப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.
சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் துறை நிறுவனங்களின் கூற்றுப்படி, பட்டதாரிகள் தற்காலிக வேலைகளுக்குப் பதிலாக நிரந்தர வேலைகளுக்கு அதிகம் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். ரஹ்மா தனது படிப்பில் கவனம் செலுத்துவதற்காக ஆர்கோஸ் மற்றும் செயின்ஸ்பரிஸ் ஆகிய நிறுவனங்களில் பார்த்த பகுதிநேர வேலையை ராஜினாமா செய்திருந்தார். பின்னர், வெறும் பணத் தேவைகளுக்காக சில்லறை விற்பனைத் துறையில் கூட வேலை பெற முடியாத நிலை ஏற்பட்டது. “உண்மையான” வேலை கிடைக்கும் வரை மட்டுமே பட்டதாரிகள் தங்குவார்கள் என்பதால், நிறுவனங்கள் அவர்களைப் பணியமர்த்தத் தயங்குவதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
சொந்தச் செலவுகளைச் சமாளிக்கவும் பெற்றோருக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அவர் தனது உடற்பயிற்சிக் கூடச் சந்தாவை ரத்து செய்துவிட்டு, நண்பர்களுடன் வெளியில் செல்வதையும் குறைத்துக் கொண்டார்.
⚠️ “வெளியே செல்வதற்கே பணம் தேவைப்படுகிறது”
“இந்த பொருளாதார சூழ்நிலையில் வேலையின்றி இருப்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது. ஏனெனில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே பணம் தேவைப்படுகிறது,” என்று ரஹ்மா குறிப்பிடுகிறார்.
இறுதியில், பிஃபா (Biffa) என்ற கழிவு மேலாண்மை நிறுவனத்தின் நிதியியல் பிரிவில் வேலைக்கு விண்ணப்பித்தபோது அவரது அதிர்ஷ்டம் மாறியது. பிஃபா நிறுவனம் பட்டதாரி வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், AI மூலமான பரிசீலனைகளை நம்பியிருக்காமல், ஒருவர் வேலைக்குப் பொருத்தமானவரா என்பதை அறிய திறனடிப்படையிலான மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. AI பரிசீலனைகளில் மனிதனின் இயல்பான புரிதல் இல்லாததால் 35 சதவீதமான பிரித்தானிய வேலைவாய்ப்பு முகாமையாளர்கள் சிறந்த திறமைசாளர்களை இழக்க நேரிடுவதாக CV-Library தளத்தின் தரவுகள் காட்டுகின்றன.
🔍 நம்பிக்கை தந்த மதிப்பீட்டு முகாம்
பிஃபா நிறுவனத்தில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற மதிப்பீட்டு முகாமில் ரஹ்மா கலந்துகொண்டார். அங்கு பிற பட்டதாரி விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து, ஆபத்தான சூழ்நிலைகளில் உயிர் பிழைப்பதற்கான பொருட்களின் முக்கியத்துவத்தை வரிசைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்துடன், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பயிற்சிகள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலமாக விண்ணப்பதாரர்களின் ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடல் திறன்கள் கண்காணிக்கப்பட்டன.
இதில் சிறப்பாகச் செயற்பட்ட ரஹ்மா, கடந்த செப்டம்பர் மாதம் பிஃபா நிறுவனத்தில் பட்டதாரி நிதியியல் ஆய்வாளராக (Graduate Financial Analyst) தனது பணியைத் தொடங்கினார்.
“இன்று நான் இருக்கும் நிலையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. இந்த நிறுவனத்தில் பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறேன். இங்கு வாய்ப்புகள் எல்லைகள் அற்றதாகத் தோன்றும்,” என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
📈 தொழில்நுட்ப மாற்றமும் பட்டதாரிகளின் எதிர்காலமும்
கோர்ன் பெர்ரி நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 37 சதவீதமான நிறுவனங்கள் ஆரம்பநிலை வேலைகளை AI மூலம் மாற்றீடு செய்யத் திட்டமிட்டுள்ளன. இதன் காரணமாக பிரித்தானியாவில் 700,000 பட்டதாரிகள் வேலையின்றி நிவாரண உதவிகளைக் கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சரியான வழியில் முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இன்னமும் தொழில்முறை வாய்ப்புகள் திறந்தே உள்ளன.
பிஃபா நிறுவனத்தின் ஆரம்பகால தொழில் முகாமையாளர் பிரியோனி ஹியூஸ், தனது நிறுவனத்தில் மேலும் பல பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார். 2021 இல் பட்டதாரி திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து 52 பட்டதாரிகளைத் தனது நிறுவனத்தில் இணைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பிரைட் நெட்வேர்க் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிர்ஸ்டன் பார்ன்ஸ் கூறுகையில், “நிதிச் சேவைகள், பொதுத் துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் கற்பித்தல் ஆகிய துறைகளில் பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. தொழில்முறை சேவைகள், பொறியியல், சுகாதாரத் துறை மற்றும் AI சார்ந்த சிறப்புத் துறைகளிலும் வாய்ப்புகள் நிலையாக உள்ளன,” எனத் தெரிவித்தார்.
📝 திறன்களுக்கே முதன்மை முன்னுரிமை
“தற்காலத்தில் வேலைச் சந்தை நீங்கள் என்ன படித்தீர்கள் என்பதை விட என்ன செய்ய முடியும் என்பதையே அதிகம் எதிர்பார்க்கிறது. கல்வித் துறை மற்றும் தரங்களை விட, சவால்களை எதிர்கொள்ளும் திறன், தொடர்பாடல் ஆற்றல் மற்றும் AI கருவிகளைப் பயன்படுத்தும் திறன் போன்ற மென் திறன்களுக்கே (Soft skills) நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன,” என கிர்ஸ்டன் பார்ன்ஸ் சுட்டிக்காட்டினார்.
தற்போது தனது தொழில்முறைப் பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கும் ரஹ்மா, “சிறந்த திட்டங்களின் கீழ் பட்டதாரிகள் இணையும் போது, நிறுவனம் அவர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். என்னால் இன்னும் பல சாதனைகளைப் புரிய முடியும் என்று நம்புகிறேன்,” என உற்சாகத்துடன் கூறினார்.
#UKNews #GraduateJobs #JobSearch #CareerAdvice #Employment #AITechnology #HigherEducation #TamilKlik

