⚽ UEFA உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்பு… வர்த்தகத் திட்டத்தைக் கைவிட்டுப் பின்வாங்கியது FIFA! ⚽
உலகக் கிண்ணப் போட்டிகள் மற்றும் ஏனைய சர்வதேசத் தொடர்களின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தை சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனம் (FIFA) முற்றாகக் கைவிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் எழுந்த கடும் எதிர்ப்புகள் மற்றும் போட்டிப் புறக்கணிப்பு எச்சரிக்கைகளைத் தொடர்ந்தே FIFA இந்த முடிவை எடுத்துள்ளது.
📌 என்ன நடந்தது?
FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, ‘FIFA Forward Enterprise’ என்ற பெயரில் உலகக் கிண்ணப் பங்குகளை விற்கும் திட்டத்தைக் கடந்த ஜூலை மாதம் முன்மொழிந்திருந்தார். இத்திட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
எனினும், இத்திட்டத்துக்கு சர்வதேச உதைபந்தாட்ட உலகில் கடும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் உருவானது. “கால்பந்தாட்டத்தை எவரும் விற்கவில்லை” என FIFA அறிக்கை மூலம் நியாயப்படுத்த முயன்றபோதிலும், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இறுதியில் இறங்கிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
⚽ ஒன்றிணைந்த உதைபந்தாட்ட அமைப்புகளின் எதிர்ப்பு
ஐரோப்பிய உதைபந்தாட்டக் கூட்டமைப்பான UEFA, இத்திட்டம் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால், தனது உறுப்பு நாடுகள் FIFA உலகக் கிண்ணம் மற்றும் ஏனைய போட்டிகளில் பங்கேற்காது எனப் பகிரங்கமாகப் புறக்கணிப்பு எச்சரிக்கை விடுத்தது.
UEFA-வின் இந்தத் திடமான நிலப்பாட்டுக்கு ஆசிய உதைபந்தாட்டச் சம்மேளனம் (AFC) மற்றும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் பிராந்திய அமைப்பான Concacaf ஆகியவையும் முழுமையான ஆதரவை வழங்கின. இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற குரல்களும் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
💬 ஜியானி இன்ஃபான்டினோ வெளியிட்ட அறிவிப்பு
இத்திட்டம் கைவிடப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, “குறிப்பாக உதவி தேவைப்படும் நாடுகளின் உதைபந்தாட்ட வளர்ச்சியை வலுப்படுத்துவதையே இந்த திட்டம் நோக்கமாக்க கொண்டிருந்தது. பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இது முன்னெடுக்கப்படும் என்றும் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியிருந்தோம்,” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் அவதானித்த பிறகு, இத்திட்டம் பிளவுகளை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகிறது. பிளவுகளை ஏற்படுத்துவது நமது நோக்கமல்ல. எனவே, இந்த யோசனை இனிமேல் முன்னெடுக்கப்படமாட்டாது,” என உறுதிப்படுத்தினார்.
⏳ அடுத்து என்ன?
அனைத்து உறுப்பு நாடுகளையும், பிராந்திய அமைப்புகளையும் மீண்டும் ஒன்றிணைத்து, விளையாட்டுப் பகிர்வு நலன் அடிப்படையில் உதைபந்தாட்டத்தை உலகளவில் கொண்டு செல்வதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் நாட்களில் தொடங்கவுள்ளதாக ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
#FIFA #WorldCup #GianniInfantino #UEFA #Concacaf #AFC #FootballNews #TamilNews #TamilKlik

