🏆 ⚽ “எங்களை வெறுப்பது ஏன்?”… உலகக் கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சைக்கு ஆர்ஜென்டீனா அணி வீரர் கொடுத்த காட்டமான விளக்கம்!⚽
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றிய போது, ஆர்ஜென்டீனா அணி வீரர்கள் முதுகு காட்டி நின்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் தற்போது விளக்கமளித்துள்ளார்.
📌 இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்கள்!
நியூ ஜெர்சியில் அமைதியற்ற முறையில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் இறுதியில் இரு அணி வீரர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றன. ஆர்ஜென்டீனா அணியின் மத்திய கள வீரர் லியான்ட்ரோ பாரேடஸ், ஸ்பெயின் அணியின் காவி மற்றும் எரிக் கார்சியாவைத் தள்ளி வீழ்த்தித் தாக்கியதுடன், பயிற்சியாளர் ரொபெர்ட்டோ அயாலா, ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோவின் கழுத்துப் பகுதியில் தாக்கிய சம்பவமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தை உயர்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ஆர்ஜென்டீனா அணி வீரர்கள் அவர்களுக்கு முதுகு காட்டி நின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ‘தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள்’ என உலகக் கால்பந்து ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
💬 “நாங்கள் செய்ததில் என்ன தவறு?” – லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் விளக்கம்
இந்த விமர்சனங்கள் குறித்துத் தனது சொந்த ஊரான குவாலேகுவாய்க்குத் திரும்பிய பின்னர் கருத்துத் தெரிவித்த மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தடுப்பாட்ட வீரர் லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ், “போட்டி முடிந்ததும் நாங்கள் ஸ்பெயின் அணி வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தோம். கமராவில் நாங்கள் முதுகு காட்டி நின்றதாகக் காட்டப்பட்ட படம், மைதானத்தில் எமக்காகப் பாடிக்கொண்டிருந்த எமது நாட்டு ரசிகர்களுக்கு மதிப்பளிப்பதற்காகவே ஆகும்,” எனத் தெளிவுபடுத்தினார்.
“எதிரணியினரை நாங்கள் எப்போதும் மதித்தே நடந்து கொள்கிறோம். எம்மீது வீண் வெறுப்பைப் பரப்புபவர்கள் கூறும் கருத்துகளில் எந்தவொரு உண்மையும் இல்லை. எமது ரசிகர்களை விட்டுவிட்டு எம்மால் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
⚠️ பயிற்சியாளரின் கருத்து மற்றும் ஃபிஃபாவின் அதிரடி நடவடிக்கை!
முன்னதாக, ஆர்ஜென்டீனா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்காலோனி, தனது வீரர்கள் தோல்வியடைந்தாலும் களத்தில் தங்களது முழுமையான திறமையை வெளிப்படுத்தி நாட்டு மக்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இறுதிப் போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ஜென்டீனா அணியினரின் ஒழுங்கீனமான செயற்பாடுகள் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
#Argentina #Spain #WorldCup #LisandroMartinez #FootballNews #SportsNews #FIFA #TamilKlik

